search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் அனைத்து வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    பிற மாநகராட்சிகளை போல் அல்லாது திருப்பூர் மாநகராட்சி தேர்தல் முடிவு சற்று வித்தியாசமானதாக அமைந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர புதிய மாமன்றம் ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆளும் கட்சியான தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் இல்லாததும், தி.மு.க., கூட்டணிக் கட்சியினர் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க., என மாற்றுக்கட்சி கவுன்சிலர்களின் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டிய நிர்பந்தம் மாமன்றத்துக்கு உள்ளது.

    பிற மாநகராட்சிகளை போல் அல்லாது திருப்பூர் மாநகராட்சி தேர்தல் முடிவு  சற்று வித்தியாசமானதாக அமைந்தது. தி.மு.க., தனிப்பெரும்பான்மை பலத்தை பெற இயலவில்லை. இதற்கு காரணம் தி.மு.க., மொத்தமுள்ள 60 வார்டுகளில் 32 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டதுதான். இவற்றில் 23 வார்டுகளை மட்டுமே தி.மு.க.,வால் வெல்ல முடிந்தது. 

    கூட்டணிக் கட்சியினரான இந்திய கம்யூனிஸ்டு 6, ம.தி.மு.க., 3, காங்., 2 , மார்க்சிஸ்டு கம்யூ., ஐ.யூ.எம்.எல்., ம.ம.க., தலா ஒரு வார்டை வென்றுள்ளன.

    தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் எனில் 31 வார்டுகளில் வென்றிருக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் கூட்டணிக் கட்சியினரை அனுசரித்தால்தான் மாநகராட்சியில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும் என்பதுதான் யதார்த்த நிலை. அ.தி.மு.க., 18 வார்டு, பா.ஜ.க., 2, த.மா.கா., 1, சுயேச்சைகள் 2 வார்டுகளை கைப்பற்றியிருக்கின்றனர். மாநகராட்சியில் அ.தி.மு.க., பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக உள்ளது.

    மேயரில் துவங்கி மண்டலத்தலைவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளை  கைப்பற்றுவதற்கு தி.மு.க.,வில் கடும் போட்டி நிலவுகிறது. ஆனால்  கூட்டணிக் கட்சியினருக்கும் சில பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மாநகர புதிய மாமன்றத்தின் மீது பொதுமக்களிடம் எதிர்பார்ப்புகள் ஏராளம். அடிப்படை கட்டமைப்பு வசதி, குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு என எண்ணற்ற பிரச்சினைகளால் தினமும் மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெருக்கடி கட்டுக்கடங்காமல் உள்ளது. 

    பறக்கும் பாலங்களில் தொடங்கி சாலைகளை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தியாக வேண்டும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

    வரி வசூலிலும் கவனம் செலுத்த வேண்டும். கோடிக்கணக்கான அன்னியச்செலாவணியை ஈட்டித்தரும் நகரம் என்ற வகையில் மத்திய, மாநில அரசுகளின் நேரடி உதவியைப் பெறுவதில், மாமன்ற நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

    ஆக்கபூர்வப்பணிகளுக்கு ஒத்துழைத்தல், எதிர்ப்பை அறவழியில் காட்டுதல், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல், ஒவ்வொரு வார்டுகளுக்கும் வசதிகளை செய்வதில் அக்கறை செலுத்துதல், கட்சிப் பார்வையை நுழைக்காமல் மாநகரின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுதல் ஆகியன காலத்தின் கட்டாயம். இதற்கு  அனைத்துக் கட்சி கவுன்சிலர்களின் ஒத்துழைப்பும் மேயருக்கு நிச்சயம் தேவைப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 
    Next Story
    ×