என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் கடும் சோதனை செய்து முகவர்களை உள்ளே அனுமதித்தனர்.
    X
    போலீசார் கடும் சோதனை செய்து முகவர்களை உள்ளே அனுமதித்தனர்.

    தீவிர சோதனைக்கு பின்பு முகவர்களுக்கு அனுமதி

    ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் நுழைவாயிலில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டனர்.
    ஈரோடு:

    ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் நுழைவாயிலில்  கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டனர். 

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, சத்தியமங்கலம், பவானி, புஞ்சைபுளியம்பட்டி என 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட வாக்குபதிவு பெட்டிகள் சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டாங் ரூமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. 

    இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதையொட்டி சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி முழுவதும் போலீ சார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 

    டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் வளாகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையத் திற்குள் வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டது. 

    இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது.  

    இன்று காலை 6 மணி   அளவில் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரி நுழைவாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது ஒவ்வொரு வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தலைமை வேட்பாளர்கள் வரத் தொடங்கினார்கள்.  

    நுழைவாயிலில் அவர்களுக்கு கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் அடையாள அட்டை இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கப் பட்டனர். 

    இதேபோல் செல்போன், பை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. செல்போன்களை நுழைவாயிலேயே போலீசார் வாங்கிக் கொண்டனர். 

    நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரிசையில் நின்று ஒவ்வொருவராக போலீசார் சோதனை செய்தனர். 

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை மேற்கொள் ளப்பட்டன. நுழைவாயிலில் யார்? யார்? வந்தார்கள் என்பது குறித்து பதிவு செய்யப்பட்டது. 

    வாகனங்கள் தனியாக நிறுத்துவதற்கு அருகில் உள்ள காலி இடம் ஒதுக்கப்பட்டது. 

    மையத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கபடவில்லை. வேட்பாளர்கள், முகவர்கள் பேப்பர், பேனா கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    நுழைவு வாயிலில் இருந்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள், முகவர்கள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர். 

    மேலும் வாக்கு எண்ணிக்கை மையம் முன்பு ஏராளமான அரசியல் கட்சியினர் காலை முதலே திரண்டு இருந்தனர். 

    இவர்கள் தேர்தல் முடிவுகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டு இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 14 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் தீவிர சோதனைக்கு பின்பே வேட்பாளர்கள், முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

    மேலும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ளனர்.
    Next Story
    ×