search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பின்னலாடை துறை பொருட்களை திருப்பூரிலேயே தயாரிக்க திட்டம்

    திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான அக்சசரீஸ்களை உள்ளூரிலேயே தயாரிக்கும் வகையில் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்க லகு உத்யோக் பாரதி முடிவு செய்துள்ளது.
    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு பட்டன், ஜிப், லேஸ், லேபிள், ஹேங்கர் போன்ற அக்சசரீஸ்கள் (துணைப்பொருட்கள்) மிக முக்கியமானதாக உள்ளன. திருப்பூரில் இத்தகைய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் இல்லை. பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் ஆடை தயாரிப்புக்கு தேவையான அக்சசரீஸ்களை அதிக அளவில் டெல்லி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  

    திருப்பூரில், பின்னலாடை தொழில் துறையினர் இணைந்து பொது பயன்பாட்டு மையங்களை உருவாக்கி வருகின்றனர். ‘சிம்கா’ சங்கம், நிட்டிங் துறைக்கான பொது பயன்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. தொழில் பாதுகாப்புக்குழு அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கி வருகிறது. ‘நிப்ட்-டீ’ கல்லூரி அருகே  டிசைனிங்கிற்கான பொது பயன்பாட்டு மையம் உருவாக உள்ளது.

    இந்தநிலையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான அக்சசரீஸ்களை உள்ளூரிலேயே தயாரிக்கும் வகையில் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்க  லகு உத்யோக் பாரதி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து லகு உத்யோக் பாரதி மாவட்ட தலைவர் ரஞ்சித்குமார் கூறியதாவது:

    பின்னலாடை நகரான திருப்பூரில் ‘அக்சசரீஸ்’ உற்பத்தி கட்டமைப்புகள் இல்லாதது பெரும் குறைபாடாக உள்ளது. இந்த இடைவெளியை பூர்த்தி செய்யும்வகையில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் ‘அக்சசரீஸ்’ உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையத்தை நிறுவ லகு உத்யோக் பாரதி திட்டமிட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரை இணைத்து புறநகர் பகுதிகளில் இடம் தேர்வு செய்து, பொது பயன்பாட்டுமையம் அமைக்கப்படும்.

    இதன்மூலம் திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களின் ‘அக்சசரீஸ்’ தேவை எளிதில் பூர்த்தியாகும். வெளிமாநிலம், வெளி நாடுகளில் ஆர்டர் செய்துவிட்டு ‘அக்சசரீஸ்’களுக்காக காத்திருக்கும் நிலை நீங்கும். இதனால் ஆடை உற்பத்தி வேகம்பெறும். குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர் வளர்ச்சி பெறுவர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

    மையம் அமைப்பது குறித்து தொழில் துறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த விரைவில் கருத்தரங்கம் நடத்தப்படும். இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் பங்கேற்பர். பொது பயன்பாட்டு மையத்தில் இணைவது குறித்து தொழில்முனைவோரிடம் விருப்பம் கோரப்படும். தொடர்ந்து மையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×