search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை குடிநீர் வாரியம்
    X
    சென்னை குடிநீர் வாரியம்

    சென்னைக்கு டிசம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது

    தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் ஏப்ரல் மாதம் வரை தண்ணீரை வெளியேற்ற வேண்டாம் என்று ஆந்திராவுக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் இருந்து சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    மேலும் வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவைவிட அதிகமாக பெய்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் அதிகளவில் மழை பெய்தது.

    இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின்போது அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிந்தன. சென்னை ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் 20 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, தேர்வாய் கண்டிகை ஏரிகளில் தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. இது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு டிசம்பர் மாதம் வரை வினியோகிக்க போதுமான தண்ணீர் ஆகும்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.

    இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் ஏப்ரல் மாதம் வரை தண்ணீரை வெளியேற்ற வேண்டாம் என்று ஆந்திராவுக்கு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே கோடை காலத்தில் நிலுவையில் உள்ள தண்ணீரை பெற வாய்ப்பு உள்ளது.

    வேகமான வளர்ச்சி காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் செல்லும் பாதை இல்லை. மேலும் போதிய தண்ணீர் சேமிப்பு வசதிகள் இல்லாததால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    தண்ணீரை சேமித்து வைப்பது என்பது கடினமான பணியாகும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க புதிய நீர் வழித்தடங்களை உருவாக்குவதன் மூலம் நீர் வழிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான முன்மொழிவு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×