என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இன்று மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக மாட்டு சந்தை நிர்வாகத்தினர் மாற்று ஏற்பாடுகளை செய்தனர்.
அதன்படி சந்தை நடைபெறும் வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக வெளிமாநிலத்தில் வந்த வியாபாரிகள் மாடுகளை வாங்கி இந்த ஏ.டி.எம். மையம் மூலம் பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் கடந்த 2 வாரமாக வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இதேபோல் இன்று கூடிய சந்தையில் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர்.
அதில் மாட்டு வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டனர். இன்று கூடிய சந்தையில் 450 பசுமாடுகள், 200 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆகின.
சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டது.
பசுமாடுகள் 45 ஆயிரம் ரூபாய் வரைக்கும், எருமை மாடுகள் 35 ஆயிரம் ரூபாய் வரைக்கும், வளர்ப்பு கன்றுகள் 15 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.
Next Story






