search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    எதிர்தரப்பை அவமானப்படுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் நாடகம் நடக்கிறது- ஐகோர்ட்டு கருத்து

    செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்ட காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் எதிர் தரப்பினரை அவமானப்படுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் நாடகம் நடக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
    சென்னை:

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், “என் கணவர் இறந்துவிட்டார். இதனால், வைத்தியநாதன் என்பவரது வீட்டில் வேலை செய்தேன். என் மகள் திருமணத்துக்காக அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தேன். அந்த பணத்தை ஒட்டுமொத்தமாக திருப்பி தர வேண்டும் அல்லது அவரது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்.

    வேறு வழியில்லாமல் நான் சம்மதித்தேன். இதனால், எனக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வைத்தியநாதன் எங்கோ எடுத்து சென்றுவிட்டார். என் குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மனுதாரரின் குழந்தையை மீட்க வைத்தீஸ்வரன்கோவில் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி ஆஜராகி, குழந்தையை பானு-பாஷா முஸ்லிம் தம்பதியிடம் மனுதாரர் தத்து கொடுத்துள்ளார். அந்த தம்பதியிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டு, அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ளது” என்று கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வக்கீல் ஆர்.பிரதாப் குமார், மனுதாரருக்கு எதிராக போலீசார், வைத்தியநாதன், குழந்தையை வைத்திருந்த தம்பதி ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனர். குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை விசாரிக்காமல் போலீசார் செயல்படுகின்றனர்.

    மனுதாரரின் மகன் ஆளும்கட்சியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால், மனுதாரருக்கு எதிராக அனைவரும் செயல்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து நீதிபதிகள், “இந்த பிரச்சினையே தேர்தலை முன்னிட்டுதான் என்று நினைக்கிறோம். முன்பெல்லாம் செய்த சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டனர். அல்லது இதை செய்வேன் என்று உத்தரவாதம் அளித்து ஓட்டு கேட்டனர். அவையெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் எதிர்தரப்பினரை அவமானப்படுத்தி ஓட்டு கேட்கும் அரசியல் நாடகம் நடக்கிறது. வைத்தியநாதனின் மகன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால் அவரை அவமானப்படுத்துவதற்காக அரசியல் எதிர்தரப்பினர் இந்த மனுதாரரை தூண்டிவிட்டு இருக்கலாம். இது எங்களுடைய யூகம் மட்டுமே” என்று கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் மனுதாரரிடம் நீதிபதிகள் விசாரித்தபோது தன் குழந்தைக்கு வைத்தியநாதன்தான் தந்தை என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், “எதிர்மனுதாரர் வைத்தியநாதன் இந்த குழந்தைக்கு தந்தை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது மரபணு சோதனைக்கு சம்மதிக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

    இதற்கு வைத்தியநாதன் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்யலாம். இது குறித்து என் கட்சிக்காரரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன் என்று பதில் அளித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், காப்பகத்தில் உள்ள குழந்தையை மனுதாரரிடம் ஒப்படைக்க போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
    Next Story
    ×