என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
குற்றச்சம்பவங்களை தடுக்க குடிமங்கலத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுமா?
தளி போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன.
குடிமங்கலம்:
உடுமலை காவல் நிலைய உட்கோட்டத்திற்குட்பட்ட குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் முன் 18 ஊராட்சிக்குட்பட்ட 40 கிராமங்கள் இருந்தன. கடந்த 2009-ல் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும், கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பூர் மாவட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு குடிமங்கலம் போலீசில் சேர்க்கப்பட்டன.
தற்போது குடிமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டில் 23 ஊராட்சிகளுக்குட்பட்ட 96 கிராமங்கள் உள்ளன. போலீஸ் பற்றாக்குறையால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதனால் பெதப்பம்பட்டி நால்ரோட்டில், புறக்காவல் நிலையம் அமைத்து மேற்குப்பகுதி கிராமங்களை அந்நிலைய கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் புறக்காவல் நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தளி போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை மாவட்டம் கோமங்கலம் போலீஸ் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. தற்போது 45-க்கும் அதிகமான கிராமங்கள் தளி போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதில் ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனப்பகுதியிலுள்ள 6 மலைவாழ் கிராமங்களும் உள்ளடங்கும். நீண்ட இழுபறிக்குப்பிறகு திருப்பூர்-, கோவை மாவட்ட எல்லையான தேவனூர்புதூரில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.
தற்போது சோதனைச்சாவடி பணிக்கும் போலீசார் நியமிக்கப்படாமல் பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






