என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார நிர்வாகிகள் மனு.
    X
    வட்டார நிர்வாகிகள் மனு.

    ஆயுள் காப்பீட்டு பிரிமியத் தொகையை பிடித்தம் செய்ய வலியுறுத்தி மார்ச் 7-ந்தேதி ஆர்ப்பாட்டம்

    ஆயுள் காப்பீட்டு பிரிமியத் தொகையை ஆசிரியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வலியுறுத்தி அடுத்த மாதம் 7-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    திருவாரூர்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் வலங்கைமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது, பங்களிப்பு ஓய்வூதிய ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக களைதல் வேண்டும். 

    உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இக்கோரிக்கைகளில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். 

    சமீப காலமாக தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகளின் போக்கு இருந்து வருகிறது. இதனால் ஆசிரியர்களிடத்தில் கொந்தளிப்பான மனநிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை சரி செய்யும் வகையில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களின் சுயமரியாதையை பாதிக்காத வகையில் செயல்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்கள் ஆலோசனை வழங்க வேண்டும். 

    வலங்கைமான் ஒன்றியத்தில் ஆயுள் காப்பீடு பிரிமியத் தொகைகளை ஊதியத்தில் இருந்து நேரடியாக பிடித்தம் செய்து செலுத்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மார்ச் 7ஆம் தேதி வலங்கைமான் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வட்டாரக் கிளை முடிவு செய்திருக்கிறது. 

    எனவே இதுகுறித்து உடனடியாக கலந்து பேசி எல்.ஐ.சி. பிரிமியம் தொகை பிடித்தம் செய்ய உத்தரவிட வேண்டும். ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்து ஆவணங்களை பெங்களூர் வருமானவரித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டியுள்ளது.

    இதற்கான படிவங்கள் தயார் செய்து தருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இதில் வலங்கைமான் வட்டாரக் கல்வி அலுவலகம் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் ஈவேரா, மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாவட்ட துணைத் தலைவர் நிர்மல், வலங்கைமான் வட்டாரச் செயலாளர் சரவணக்குமார், வட்டாரத் தலைவர் பாலசுந்தரம், வட்டாரப் பொருளாளர் ராஜாராமன், டேவிட் ஞானராஜ் மற்றும் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×