என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட மரகதம், குழந்தைகள், கணவருடன் உள்ளார்
    X
    தற்கொலை செய்து கொண்ட மரகதம், குழந்தைகள், கணவருடன் உள்ளார்

    கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு - 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

    சேலம் அருகே கணவரின் கள்ளக்காதலால் மனைவி தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காடையாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருடைய மனைவி மரகதம் (30). இவர்களது மகன்கள் செல்வகணபதி (7), கோகுல் கண்ணன் (5).

    வசதியான குடும்பத்தை சேர்ந்த பிரபாகரன் தனது மனைவி, மகன்களுடன் இரண்டு அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார். மேலும் பிரபாகரன், தனது வீட்டின் அருகே சொந்தமாக பிளாஸ்டிக் பை தயாரிக்கும் பெரிய கம்பெனி வைத்துள்ளார். இங்கு உரம் பேக்கிங் செய்யும் 50 கிலோ பிளாஸ்டிக் பை தயாரித்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் தனது உறவினர் ஒருவர் மோரூர் பகுதியில் நடத்தி வரும் தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனம் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

    அப்போது பிரபாகரனுக்கும் அந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு மணிக்கணக்கில் ஜாலியாக சிரித்து பேசி வந்தனர். தொடர்ந்து பிரபாகரன் அந்த பெண்ணை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த பிரபாகரனின் உறவினர், 2 பேரையும் அழைத்து கண்டித்தார். மேலும் இந்த வி‌ஷயத்தை பிரபாகரனின் மனைவி மரகதத்திடமும் தெரிவித்தார். இதனால் மரகதம், தனது கணவரிடம் நமக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கள்ளக்காதலை கைவிடுங்கள். இல்லையென்றால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும், ஊரில் அனைவரும் தவறாக பேசுவார்கள் என அறிவுறுத்தினார். ஆனால் பிரபாகரன் கேட்கவில்லை.

    இரவு அடிக்கடி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததார்.இதனால் கடந்த ஒரு மாதமாக கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலையில் இருவருக்கும் வீட்டில் வைத்து சண்டை ஏற்பட்டது. அப்போது மரகதம், நான் முக்கியமா அல்லது கள்ளக்காதலி முக்கியமா என சொல்லுங்கள். கள்ளக்காதலி முக்கியம் என்றால் என்னையும் குழந்தைகளையும் விட்டு விடுங்கள் என மரகதம் கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து இருவரையும் உறவினர் ஒருவர் சமாதானப்படுத்தினார். இந்த நிலையில் பிரபாகரன் நேற்று இரவு கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த மனைவி மரகதம் நான் எவ்வளவோ சொல்லியும் கணவர் கேட்கவில்லை. கள்ளக்காதலையும் கைவிட மறுத்து விட்டார். இனிமேல் கணவருடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். தான் மட்டும் இறந்தால் குழந்தைகளை யாரும் கவனிக்கமாட்டார்கள் என எண்ணி மரகதம் கதறி அழுதார். இதனால் குழந்தைகையும் கொன்று விட முடிவு செய்தார்.

    நள்ளிரவு வீட்டையொட்டி இருக்கும் தனது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு மரகதம், தூக்க கலக்கத்தில் இருந்த தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது மரகதம் தனக்கு நீச்சல் தெரியும் என்பதால் தான் பிழைத்து விடக் கூடாது என்பதற்காக அவர் தனது 2 குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து இறுக்கமாக கயிரை கட்டினார்.

    பின்னர் அந்த கயிற்றின் மறுமுனையை கல்லில் இறுக்கமாக கட்டிக் கொண்டு கல்லுடன் 3 பேரும் சேர்ந்து கிணற்றில் குதித்தனர். இதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இன்று காலை பிரபாகரன் வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அங்கு கிணறுக்குள் மனைவி, பிணமாக கிடந்ததை கண்டு காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும், தீவட்டிப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி மரகதம் உடலை மீட்டனர். இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு கோகுல் கண்ணன் உடலை மீட்டனர். கிணறு பல அடி ஆழம் என்பதால் செல்வகணபதி உடலை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.

    தற்கொலை செய்து கொண்ட மரகதத்தின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் எக்காண்டஹள்ளி பகுதி ஆகும். இவரும், பிரபாகரனும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கணவரின் கள்ளக்காதலால் மனைவி தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காடையாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×