என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்த போது எடுத்தப்படம்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று போலீசார் கொடி அணி வகுப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று போலீசார் கொடி அணி வகுப்பு நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று போலீசார் கொடி அணி வகுப்பு நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும், 42 பேரூராட்சிகளிலும் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப் பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாவட்டம் முழுவதும் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்துவது வழக்கம்.
அதன்படி ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு டவுண் சப்-டிவிசனில் உள்ள கருங்கல்பாளையம், சூரம்பட்டி, டவுன், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா, ஈரோடு மகளிர் போலீஸ் ஆகிய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலமானது கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி காவிரி ரோடு, கே.எம்.கே.ரோடு, மூலப்பட்டறை வழியாக பவானி ரோட்டில் முடிவடைந்தது.
இதேபோல் சத்தியமங்கலத்திலும் போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடந்தது. சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த அணி வகுப்பில் 50-க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
இதேபோல் கோபி, பெருந்துறை, பவானி, சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி, கொடுமுடி என மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
Next Story






