என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுத்தை தாக்கி இறந்த நாய்களை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடிவு
நம்பியூரில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
நம்பியூர்:
நம்பியூரில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம், செட்டியம்பதி பகுதியில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கி ஆடுகள் பலியானது. அதனைத் தொடர்ந்து நம்பியூர் மற்றும் இருகாலூர், வேமாண்டம்பாளையம், கூடக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது 26-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமிராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் தெர்மல் கேமிரா மூலமும் சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கூடக்கரை ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவரின் 4 நாய்களை சிறுத்தை தாக்கி பலியானது.
கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் பற்றி பொதுமக்கள் கூறி வந்த நிலையில் சிறுத்தை தாக்கி நாய்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர்.
அப்போது இந்த தாக்குதலில் ஈடுபட்டது காட்டு பூனையாக இருக்கலாம் எனவும், சிறுத்தை உணவு சாப்பிடாமல் செல்லாது. மேலும் காட்டுப்பூனைகள் தான் கழுத்தை உடனடியாக பிடிக்கும் எனவும் வனத்துறையினர் கூறினர்.
இது குறித்து டி.என். பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் கூறியதாவது:-
நாங்கள் தீவிரமாக தாக்குதலில் ஈடுபட்டு வரும் காட்டு விலங்கை தேடி வருகிறோம். இன்று கூடக்கரை மற்றும் இருகாலூர் அருகே உள்ள பொன்காத்த அய்யன் கோவில் குளத்தின் பகுதியில் கூண்டுகள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான பணிகள் இன்று நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






