search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூ மார்க்கெட்டில் குவிந்துள்ள ஓசூர் ரோஜாக்கள்
    X
    பூ மார்க்கெட்டில் குவிந்துள்ள ஓசூர் ரோஜாக்கள்

    ஒசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் 1.50 கோடி ரோஜா - 2 ஆண்டுக்குபின் விவசாயிகள் உற்சாகம்

    காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

    காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா மலர்கள்தான். ரோஜா என்றதுமே நம் நினைவில் வருவது ஒசூர்.

    தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்பநிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன.

    பசுமைக்குடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உள்ளது.

    இங்கு ஆண்டுக்கு சுமார் 3 கோடி முதல் 4 கோடி வரை ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகையான ரோஜாமலர்கள் 75 சதவீதம் ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்காலங்களில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டிலும் மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரபுநாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக ரோஜா வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஓசூர் பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. மேலும் உள்ளூர் சந்தைகளில் விற்க முடியாமல் பூக்கள் குப்பைகளில் கொட்டப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு ரோஜா வர்த்தகம் களை கட்ட தொடங்கி உள்ளது. ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் பெய்த மழை மற்றும் சாதகமான தட்பவெட்பநிலை காரணமாக ரோஜா உற்பத்தி அதிகரித்துள்ளது.

    காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட 1 கோடி மலர்கள் அதிகமாக இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அப்பகு தியில் இருக்கும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பசுமைக்குடில் அமைத்து ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ஓசூர் ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த ரோஜா வர்த்தகம் இந்த ஆண்டு முன்பு போல உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

    காதலர் தினத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒசூரில் இருந்து ரோஜா மலர்கள் ஏற்றுமதி தொடங்கியது. நாளை (11-ந் தேதி) வரை ஏற்றுமதி நடைபெறும். இந்த ஆண்டில் 1 கோடி முதல் 1.50 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.

    காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இதுகுறித்து ஓசூர் சிறுகுறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒரு ரோஜா 16 முதல் 20 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகூர்த்த நாட்கள் அதிகமாக வருவதால் உள்ளூர் சந்தையிலேயே அதே விலை கிடைக்கிறது. மேலும் ரோஜாக்களை ஏற்றுமதி செய்தால் அதற்குரிய பணம் கைக்கு வந்து சேர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால் உள்ளூர் சந்தையில் உடனே பணம் வந்துவிடும். மேலும் விமான கட்டணமும் உயர்ந்து விட்டதால் உலக சந்தையில் ஓசூர் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் பருவநிலை மாற்றத்தால் கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய ரோஜா பூக்கள் சாகுபடி ஒரு வாரத்துக்கு முன்பே ஜனவரி 22-ந் தேதி தொடங்கி விட்டது. ஆனால் போதிய பூக்கள் இல்லை. இதன் காரணமாக ரோஜாக்கள் விலை இந்தாண்டு உயர்ந்துள்ளது.

    தற்போது 20 ரோஜாக்கள் கொண்ட கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×