என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    டாஸ்மாக் பார் ஊழியரை வெட்டிக்கொன்ற 6 பேர் கைது

    காளையார்கோவில் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்த அதியதிரும்பல் கிராமத்தை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சண்முகம் (வயது 32). இவர் கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் விடு முறைக்கு ஊருக்கு வந்திருந்த சண்முகம் சம்பவத்தன்று  காளையார்கோவில் பக்க முள்ள புரசடி உடைப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 

    கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்த அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத் தினர். 

    சண்முகம்  கொலைக் கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்புதுலங்க சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.  சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதி அருகே உள்ள மதுக்கடை  உள்ளிட்ட இடங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தன்று சண்முகத்துக்கும், சிலருக்கும் மதுக்கடை அருகே வைத்து தகராறு நடந்ததாக சிலர் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சண்முகத் துடன் தகராறு செய்த நபர்கள் யார்? என்று போலீசார் துப்புதுலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது அவருடன் தகராறு செய்த நபர்கள் மறவமங்கலத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (24), அருண்குமார் (24) மற்றும் 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், 16 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சண்முகத்தை கொன்றது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.  சம்பவத்தன்று சண்முகம் மது குடிக்க புரசடி உடைப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு செல்லப்பாண்டி உள்ளிட்ட 6 பேரும் மது வாங்க வந்திருக்கின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தங்களின் மீது மோதுவது போல் வந்ததாக கூறி சண்முகத்தை தட்டிக் கேட்டுள்ளனர். 

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சண்முகம் மதுக்கடையில் இருந்து சற்று தொலைவில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மது குடித்துள்ளார். 

    அப்போது அங்கு செல்லப்பாண்டி உள்ளிட்டோர் சென்று சண்முகத்திடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை கத்தியால் கழுத்தை  அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கின்றனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 

    இதையடுத்து  செல்லப் பாண்டி, அருண்குமார் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் 4 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
    Next Story
    ×