search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனித்துப் போட்டி

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தனித்துப் போட்டி மாவட்ட செயலாளர் தகவல் தெரிவித்தார்.
    வேலூர்:

    தி.மு.க. கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தயாநிதி தெரிவித்தார்.

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் பல்வேறு கட்டங்களாக அறிவித்தது.

    வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும்.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகளுக்கு வார்டு ஒதுக்குவதில் கடும் இழுபறி காணப்பட்டது.

    குறிப்பாக கூட்டணி கட்சிகள் கேட்ட வார்டுகளை வழங்குவதில் சிக்கல் நிலவியது. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட மற்றும் போதிய வார்டு ஒதுக்க முடியாத நிலை காணப்பட்டது. 

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    இது குறித்து அக்கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தயாதிநிதி கூறுகையில்:-

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு வேலூர் மாநகராட்சியில் 2 வார்டும், குடியாத்தம் நகராட்சியில் 2 வார்டும் என்று 4 வார்டுகள் ஒதுக்க வேண்டும்.

    அதேபோன்று திருப்பத்தூர், ஆம்பூர் நகராட்சிகளில் தலா ஒரு வார்டும், வாணியம்பாடி நகராட்சியில் 2 வார்டும் என்று 4 வார்டுகள் வழங்க வேண்டும் தி.மு.க. கட்சியிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் 2 மாவட்டங்களிலும் போதிய இடம் கிடைக்கவில்லை. 

    அதனால் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்து விட்டோம்.

    வேலூர் மாநகராட்சியில் 12, 23, 58 ஆகிய வார்டுகளிலும், குடியாத்தம் நகராட்சியில் 23, 36 ஆகிய வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    மேலும் வேலூர் மாநகராட்சி 19-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மோகனவள்ளிக்கு ஆதரவு அளிக்கிறோம். இதேபோன்று திருப்பத்தூர் நகராட்சியில் 23 வார்டிலும், ஆம்பூரில் 34-வது வார்டிலும், வாணியம்பாடி நகராட்சியில் 26,36-வது வார்டிலும் போட்டியிடுகிறோம். 

    வேலூர் மாவட்டத்தில் 3 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார்.
    Next Story
    ×