என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரர் சுரேஷ்
    X
    போலீஸ்காரர் சுரேஷ்

    வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    காதலித்த ஆசிரியையை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    பெரம்பலூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புது உத்தமன் ஊர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுரேஷ் (வயது 31). இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்

    இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியைச் சேர்ந்த புவனா (வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார். அவர் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இதற்கிடையே புவனா வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் சுரேஷ் வீட்டில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உடனடியாக சுரேசுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக ஏற்பாடுகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

    அதன்படி திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து சுரேசுக்கு வருகிற 7-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது. சுரேசின் பெற்றோரும் அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். இந்த தகவலை அறிந்த ஆசிரியை புவனா கடந்த 31-ந்தேதி திருச்சி சரக ஐ.ஜி.யிடம், தன்னை காதலித்த சுரேஷ் திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக புகார் அளித்தார்.

    இதை அறிந்த சுரேஷ் கடந்த 1-ந்தேதி முதல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அன்று மாலை பெரம்பலூருக்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார்.

    தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போன ஏக்கத்தில் சுரேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். பின்னர் அவர் வி‌ஷ மருந்தை சாப்பிட்டு உள்ளார். இதனை அறிந்த சுரேசின் நண்பர் பழனிச்சாமி அவரை மீட்டு நேற்று மாலை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் போலீஸ்காரர் சுரேஷ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த பெண் கிடைக்காத ஏக்கம், வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு, ஐ.ஜி.யிடம் புகார் என மன உளைச்சலில் தவித்த போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×