என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ளது நல்லூர் ஊராட்சி. இங்கு 75 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தற்போது குறைந்த அளவிலே தண்ணீர் உள்ளது.
புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான சாயபட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாய பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை வழியாக நல்லூர் குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கால்நடைகள் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எனவே குளத்தில் சாயநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும் நல்லூர் பொதுமக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நல்லூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் இன்ஸ் பெக்டர் நெப்போலியன், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, வருவாய் ஆய்வாளர் யோகநரசிம்மன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
Next Story






