search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்து வாலிபர் பலி

    பாதாள சாக்கடை குழிக்குள் வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின்ரோடு எம்.எஸ்.நகர் வி.ஆர்.பி.நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. இதில் சில இடங்களில் குழிகள் மூடப்பட்ட நிலையில், சில இடங்களில் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழும் நிலை ஏற்பட்டது. எனவே குழிகளை உடனே மூட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை பாதாள சாக்கடை குழிக்குள் தலைகுப்புற வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனே திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்து கிடந்த வாலிபரின் பெயர், ஊர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் சங்கர் தியேட்டர் பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் பூபதி(வயது 24) என்பதும், திருப்பூர் மண்ணரையில் தங்கியிருந்து பெயிண்டர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    நேற்றிரவு வி.ஆர்.பி.நகர் பகுதியில் நடந்து செல்லும் போது பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் அதற்குள் பூபதி விழுந்துள்ளார். தலைகுப்புற விழுந்ததால் அவரால் எழும்ப முடியவில்லை. இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் இரவு முழுவதும் பூபதி குழிக்குள்ளேயே கிடந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்தநிலையில் பாதாள சாக்கடை குழிகளை உடனே மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில், வி.ஆர்.பி.நகர் பகுதி வழியாகத்தான் மெயின் ரோட்டுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். பாதாள சாக்கடை குழிகளை மூட பல முறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே உடனடியாக மூட வேண்டும் என்றனர். அதிகாரிகள் குழிகளை மூட உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பாதாள சாக்கடை குழிக்குள் வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×