search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
    திருப்பூர்:

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. 

    அதேபோல பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரிகளுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

    மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமலும் பள்ளி அல்லது கல்லூரி  படிப்பை தமிழகத்திலேயே முடித்து 15 ஆண்டுகள் வசித்தவராகவும், முற்றிலும் வேலை இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனத்துக்கு சென்று நாள்தோறும் படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது. 

    ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in  என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
    பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சுயஉறுதிமொழி ஆவணங்களுடன் மார்ச் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

    இந்த உதவித்தொகையானது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுக்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்கும் வழங்கப்படுவதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×