search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடிகை சவுகார் ஜானகி - சிற்பி பாலசுப்பிரமணியம்
    X
    நடிகை சவுகார் ஜானகி - சிற்பி பாலசுப்பிரமணியம்

    தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள்

    பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியம் கோவை மாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சியை சேர்ந்தவர். கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர்.
    சென்னை:

    கல்வி, கலை, இலக்கியம், சமூகப்பணி, பொது விவகாரம், விளையாட்டு, வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவித்து வருகிறது.

    2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரனுக்கு பத்ம பூ‌ஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகை சவுகார் ஜானகி, சிற்பி பாலசுப்பிரமணியம், டாக்டர் வி.சே‌ஷய்யா, ஏ.கே.சி.நடராஜன், ஆர்.முத்துக்கண்ணன், எஸ்.தாமோதரன், எஸ்.பல்லேஷ் பஜந்திரி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    பத்ம பூ‌ஷண் விருது பெற்ற என்.சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர். 1987-ம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் சேர்ந்த அவர் 2009-ம் ஆண்டு அதன் தலைமை செயல் இயக்குனராக உயர்ந்தார். தற்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். மும்பையில் வசித்து வருகிறார்.

    பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியம் கோவை மாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சியை சேர்ந்தவர். கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். 2001-ம் ஆண்டு அக்னி சாட்சி மொழி பெயர்ப்புக்காகவும், 2003-ம் ஆண்டு ஒரு கிராமத்து நதி படைப்பிலக்கியத்துக்காகவும் 2 முறை சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

    டாக்டர் சி.சே‌ஷய்யா கடந்த 1957-ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்றார். அதன் பின்னர் இந்திய ராணுவத்தில் மருத்துவ சேவையாற்றினார். சென்னை மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக இருந்த அவர் சர்க்கரை நோய் துறையை 1978-ம் ஆண்டு தொடங்கினார். டாக்டர் வி.சே‌ஷய்யாவின் பிறந்த நாளான மார்ச் 10-ந் தேதி தேசிய பேறுகால சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    ஏ.கே.சி.நடராஜன் திருச்சியை சேர்ந்த கிளாரி னெட் இசைக் கலைஞர் ஆவார். இவர் காற்று இசைக் கருவிகளை பயன்படுத்தும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

    ஆர்.முத்துக்கண்ணம்மாள் திருச்சி அருகே விராலிமலையில் அமைந்துள்ள சதிர் நடன குடும்பத்தை சேர்ந்தவர். தனது 8 வயது முதல் நடன கலையை பயின்றுள்ளார். சதிர் நடனக்கலையை பயிற்றுவித்து வருகிறார்.

    எஸ்.தாமோதரன் திருச்சி உறையூரை சேர்ந்தவர். 1987-ம் ஆண்டு கல்லூரி நண்பர்களுடன் இணைந்து கிராமாலயா தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். மத்திய அரசின் சுகாதார திட்டங்களின் செயல்பாட்டில் 35 ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர் இல்ல கழிப்பறைகளை அமைத்தார்.

    பல்லேஷ் பஜந்திரிக்கு கலை பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஷெனாய் இசைக்கலைஞர் ஆவார். ராஞ்சனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் இவர் இசைத்துள்ளார்.

    Next Story
    ×