search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நாய் குறுக்கே வந்ததால் பெண் போலீஸ் கீழே விழுந்து தலையில் பலத்த காயம்

    எலத்தூரில் இருந்து அவினாசிக்கு மொபட்டில் வேலைக்கு சென்ற பெண் போலீஸ் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சித்ராதேவி (37). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக வேலைப்பார்த்து வருகிறார்.

    சித்ராதேவிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தினமும் எலத்தூரில் இருந்து அவினாசிக்கு மொபட்டில் வேலைக்கு சென்று வந்தார். இதே போல் நேற்று காலையும் சித்ராதேவி வழக்கம் போல் சீருடையில் வேலைக்கு புறப்பட்டார்.

    இவர் தனது மொபட்டில் எலத்தூர் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக திடீரென ஒரு தெருநாய் ரோட்டை கடந்தது.

    அப்போது சித்ராதேவி ஓட்டிவந்த மொபட் மீது நாய் திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்தார். இதில் சித்ரா தேவிக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மேலும் இடது கையில் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சித்ராதேவியை மீட்டனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது சித்ராதேவியை பரிசோதனை செய்த போது அவர் சுயநினைவை இழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த போது சித்ராதேவியின் பின்பக்க தலையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    Next Story
    ×