search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலியான உடையப்பன்
    X
    பலியான உடையப்பன்

    மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

    தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு  ஒரு லாரி வந்தது. அந்த  லாரியை காரைக்குடியை சேர்ந்த சுந்தரம் என்பவர் ஓட்டி வந்தார். 

    லாரி நேற்று இரவு தேவகோட்டை அருகே உள்ள கோவணி கிராம பகுதிக்கு வந்தபோது டயர் பஞ்சரானது. இதையடுத்து டிரைவர் லாரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். பஞ்சரான டயரை கழற்றி விட்டு வேறு டயரை மாற்ற முயற்சித்தார். அந்த பகுதி இருட்டாக இருந்தது.

    இதனால் லாரி நிறுத்தப்பட்டிருந்த ரோட்டின் அருகே உள்ள வீட்டில் இருந்த விவசாயி உடையப்பன் (வயது 54) என்பவரை தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் உடையப்பனும் அங்கு வந்து  லாரியின் டயரை டிரைவர்  எளிதாக கழற்றுவதற்காக, தனது செல்போன் லைட்டை ஒளிர செய்தபடி சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் சென்றார். அவர் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த உடையப்பன் மற்றும் லாரியின் டிரைவர் சுந்தரம் ஆகியோர் மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் உடையப்பன், சுந்தரம் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உடையப்பன் பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் சுந்தரம் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடையப்பன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் எது என்று துப்பு துலக்கி வருகின்றனர். 

    லாரி டயர் பஞ்சரானதால் தவித்தப்படி நின்ற டிரைவருக்கு உதவிய விவசாயி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×