search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மகாராஜா கல்லூரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அவிநாசி:

    அவிநாசி நகர மற்றும் ஊராட்சிகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த மாதங்களில் தினசரி ஓரிருவர் மட்டுமே தொற்றுப்பரவலுக்கு ஆளான நிலையில் தற்போது தினசரி, 25 முதல் 30 பேர் வரை தொற்றுப்பரவலுக்கு ஆளாகின்றனர்.

    அவிநாசி மகாராஜா கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு திறக்கப்பட்டு 150 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 6 பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,

    வயதானவர்கள், சுவாசப்பிரச்னை உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தொற்று பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மகாராஜா கல்லூரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறி மட்டும் தென்பட்டு உடல் உபாதை பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

    கொரோனா தடுப்பூசி 15-18 வயதினருக்கு செலுத்தும்பணி தமிழகத்தில் ஜனவரி 3-ந் தேதி  தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட அனைத்து கல்வி மாவட்டங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான தகுதியில் 90 ஆயிரத்து 943 மாணவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கே சென்று நேரடியாக தடுப்பூசி போடப்பட்டது.

    5 நாட்களிலே 57 ஆயிரத்து 444 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதுவரை 85 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தொற்று தீவிரமடைந்துள்ளதால் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே விடுபட்ட மாணவர்கள் எங்கே தடுப்பூசி செலுத்திக்கொள்வது என்ற கேள்வி பெற்றோரிடையே எழுந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 15-18 வயதினர் வீட்டிற்கு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தங்கள் பள்ளி அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்றனர்.
    Next Story
    ×