என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூலப்பட்டறையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களிடம் அறிவுரை கூறிய போலீசார்.
2-வது வாரமாக இன்று முழு ஊரடங்கு தடையைமீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம்
கொரோனா தொற்று காரணமாக இன்று 2-வது வாரமாக முழுஊரடங்கு போடப்பட்டு உள்ளது. தடையைமீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு:
கொரோனா தொற்று காரணமாக இன்று 2-வது வாரமாக முழுஊரடங்கு போடப்பட்டு உள்ளது. தடையைமீறி சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு கடந்த 6--ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று 2-வது வாரமாக முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் அனைத்து கடைகள், வணிகநிறுவனங்கள், ஜவுளிகடைகள், தொழிற் சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம்பார்க் பகுதி, காளைமாடுசிலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன்கோவில்வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக்கார்னர், ஜி.எச். ரவுண்டானா, ரெயில்நிலையம், பெருந்துறைரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர்ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத்நகர், பெரியார்நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி பகுதியில் செயல்பட்டுவரும் உழவர்சந்தையும் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் அதேநேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போல் செயல்பட்டன. உணவங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன.
இதேபோல் ஓட்டலிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டு இருந்தன. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான பால் சேவைகள் வழக்கம்போல் நடைபெற்றன.
இதேபோல் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆய்வுக்கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல்பங்குகள் வழக்கம்போல் இயங்கின. இந்த முழுஊரடங்கையொட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ்நிலையம் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம் முன்களப்பணியாளர்கள் வழக்கம்போல் இன்று பணிக்கு சென்றனர்.
இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருங்கல்பாளையம் சோதனைசாவடி, பவானி லட்சுமிநகர் சோதனைசாவடி, பண்ணாரி சோதனைசாவடி, நொய்யல் ஆற்று சோதனைசாவடி என 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டும் கடும் சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு வாகனங்களில் வருபவர்கள் திருமண அழைப்புதலுடன் வந்ததால் அந்த வாகனம் அனுமதிக்கப்பட்டன. இன்று பலர் மருத்துவ தேவைக்காக வெளியே வந்ததாக கூறி அதற்கு உண்டான தகுந்த காரணத்தை கூறி வாகனங்களில் சென்றனர். அவர்களை போலீசார் அனுமதித்தனர்.

இதுதவிர தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு பன்னீர்செல்வம்பார்க், ஜி.எச்.ரவுண்டானா, காளைமாடுசிலை, ஸ்வஸ்திக்கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலத்தை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கியமான சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம், சித்தோடு, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று முழுஊரடங்கு என்றாலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.
ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்தஊருக்கு செல்வதற்காக வந்திருந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்து எதுவும் இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து நடந்தே வந்திருந்தனர்.
Next Story






