என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்.
    X
    தரமற்ற ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்.

    சாலையில் அரிசியை கொட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்

    எருக்கூர் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதாக கூறி நவீன அரிசி ஆலை முன்பு அரிசியை கொட்டி ஒப்பாரி வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர்
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது. 

    இந்த அரிசி ஆலையில் அரைக்கப்படும் அரிசியே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. 

    இங்கு இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

    தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும் தரமான அரிசி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     
    இதனிடையே எருக்கூர் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத தரமற்ற 
    அரிசியைத் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    முன்னதாக எருக்கூர் ரவுண்டானா பகுதியிலிருந்து பேரணியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் அரிசிஆலை முன்பு வந்தனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர்கள் நீதிசோழன், தனசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். 

    ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி, பெண்கள் சுற்றிநின்று ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சிதம்பரம்-சீர்காழி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை அடுத்து சீர்காழி டி.எஸ்.பி. லாமெக் தலைமையில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
    Next Story
    ×