search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளையர்கள் புகுந்த கோவிலில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.
    X
    கொள்ளையர்கள் புகுந்த கோவிலில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.

    செஞ்சி ரங்கநாதர் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதன் கோவிலில் கொள்ளை கும்பல் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைப்பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லவர்கால குடவறை கோவில் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.

    மேலும் இந்தக் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கோவில் பல அடுக்கு பாதுகாப்புகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலில் கருவறைக்கு செல்லும் வழியில் 5 கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 இரும்பு கதவுகளை கடந்துதான் கருவறைக்கு செல்ல வேண்டும்.மேலும் இந்த கோவிலில் எண்ணற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தனை சிறப்பு மிக்க கோவிலில் பலமுறை கொள்ளை முயற்சிகள் நடந்துள்ளன.

    நேற்றிரவு வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 கதவுகளை தாண்டி கோவிலின் மேற்கூரைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 3 வது கதவின் பூட்டை உடைத்து அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை உடைத்தனர். ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    சத்தம் கேட்டு இரவு பணியில் இருந்த காவலர்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து காவலர்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கோவில் உதவி ஆணையர் ராமு செஞ்சி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீஸ் டிஎஸ்பி இளங்கோவன் இன்ஸ்பெக்டர் தங்கம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கோவிலில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விழுப்புரத்திலிருந்து தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×