என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகாசி வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு: பட்டாசு ஆலை உரிமையாளருக்கு வலைவீச்சு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (வயது 42). இவர் வத்திராயிருப்பு அருகே களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் 23 அறைகள் உள்ளன. இங்கு சுமார் 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.நேற்று புத்தாண்டு என்பதால் 15 பேர் மட்டுமே வேலைக்கு வந்தனர். அவர்கள் ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் உள்ள 7 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அங்கு பணி செய்து கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குமார் (38), பெரியசாமி (55), வீரக்குமார் (40) ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மேலும் காயம் அடைந்த முருகேசன் உள்பட 10 பேரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டார். மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் முனியாண்டி, முத்துக்குமார், 8 வயது சிறுவன் மனோஅரவிந்த் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுவன் மனோஅரவிந்தின் தந்தை கோபாலகிருஷ்ணன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையை பார்க்க வந்தபோது தான் மனோஅரவிந்த் விபத்தில் சிக்கி உள்ளார். அவரது தந்தை கோபாலகிருஷ்ணனும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
வெடிவிபத்து தொடர்பாக களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்மாயன், நத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடுமுருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடுமுருகன் மீது வெடிபொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் (286), மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுவது (337), இறப்பு ஏற்படுத்துதல் 304 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.






