search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை காணலாம்
    X
    தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை காணலாம்

    தேர்த்தங்கல் சரணாலயத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்

    ராமநாதபுரம் அருகே உள்ள பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ள பறவைகள் இரைதேடி கூட்டம் கூட்டமாக பறந்து சென்று வருகின்றன.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம். வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளில் ஏராளமான நாட்டு கருவேல மரங்களும், சீமை கருவேல மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.

    இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் உணவுக்காக இரையை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து கூடுகட்டி தங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் திரும்பி செல்ல தொடங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததோடு வைகை அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்துள்ளது. இதனால் பெரியகண்மாய் முழுவதும் நீர்நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த மழையால் தேர்த்தங்கள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வெட்டுக்குளம் முழுவதும் நிரம்பி சரணாலய பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் சேர்ந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.

    இந்த ரம்மியமான சீசனை அனுபவிப்பதற்காக தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு அதிகஅளவில் பறவைகள் வந்துள்ளன. கூழைக்கிடா, சாம்பல் நிற நாரை, நத்தை கொத்தி நாரை, கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், நாமக்கோழி, கரண்டி வாயன், பெரிய கொக்கு, சிறிய கொக்கு உள்ளிட்ட பல பறவைகள் வந்துள்ளன.

    இந்த பறவைகள் சரணாலயத்தின் உட்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வளர்ந்துள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ளன. தங்களின் குஞ்சுகளுக்காக பறவைகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக இரையை தேடி அந்த பகுதி முழுவதும் சுற்றிதிரிந்து ரீங்காரமிட்டு சென்றுவருகின்றன.

    இந்த பறவைகளையும் அதன் ரீங்கார குரலையும் ரசிக்கும் வகையில் ஏராளமான பொதுமக்கள் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு சென்று பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

    இவ்வாறு தங்கி உள்ள பறவைகள் சமூக விரோதிகளால் வேட்டையாடி பிடிக்காமல் தடுப்பதற்காக உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம், வனச்சரகர் ஜெபஸ் ஆகியோர் தலைமையில் வனவர் ராஜசேகர், வாட்சர் செல்வராகவன், ஜெகதலபிரதாபன் உள்ளிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கண்காணிப்பு உயர்கோபுரத்தில் இருந்து பைனாகுலர் வழியாக சரணாலய பகுதி முழுவதும் நோட்டமிட்டு பறவைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் சரணாலயத்தில் இரை அதிகம் உள்ளதால் நீர்வரத்து குறைந்ததும் மீன்குஞ்சுகள் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×