search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அணைப்பாளையம் உயர்மட்ட பாலப்பணி - அடுத்த மாதம் மீண்டும் தொடக்கம்

    தனித்தனியே கட்டுமான பணி நிறைவு பெற்ற 3 பாலங்களும் எப்போது இணைக்கப்படும், வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் இருந்து நொய்யல் ரெயில்வே சுரங்க பாலத்தை கடந்து கல்லூரி சாலை வரும் வாகன ஓட்டிகள் சிரமத்தை தவிர்க்க கடந்த 2008ல் ஒன்றரை கி.மீ., நீளத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது. 

    பணி தொடங்கிய 5 ஆண்டில், மங்கலம் சாலையில் இருந்து நொய்யலை கடந்து ரெயில் தண்டவாளத்துக்கு 50 மீட்டர் வரை பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

    அப்பகுதியில் இருந்து சாய ஆலை, வீடுகள், பிரின்டிங் ஆகியவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். 

    இதனால் அடுத்த நான்கு ஆண்டுகள் பணி அப்படியே நிறுத்தப்பட்டது. தங்களது தரப்பு நிலவரத்தை தெளிவுபடுத்திய ரெயில்வே பொறியியல் கட்டுமான குழுவினர் 2018ல் தண்டவாளத்தின் மேல் பகுதியில் இரும்பு பாலம் அமைத்து விட்டனர். 

    நெடுஞ்சாலைத்துறை தரப்பு வாதங்களுக்கு பின் வழக்கு முடித்து வைக்கப்பட்டதால் மறுபுறமாக சாமுண்டிபுரம் -15 வேலம்பாளையம் ரிங்ரோட்டில் 100 மீட்டர் பாலம் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டது.

    தனித்தனியே கட்டுமான பணி நிறைவு பெற்ற 3 பாலங்களும் எப்போது இணைக்கப்படும், வாகன போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 2 ஆண்டுகளாக எந்த பணியும் நடக்காமல் மீண்டும் பாலம் அப்படியே போட்டு வைக்கப்பட்டுள்ளது.

    பாலம் தொடங்கும் மங்கலம் ரோடு, நொய்யல் மேல் பாலத்தில் இருந்து பார்த்தால் தண்டவாளத்தின் மேல் உள்ள பாலம் நிறைவு பெறும் இடத்தில் ரிங்ரோடு பாலம் இரண்டுமே கண்ணுக்கு கூட தெரியவில்லை. குடியிருப்பு, உயரமான மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இன்றே பணி தொடங்கினால் கூட நிறைவு செய்ய ஒரு ஆண்டு ஆகும் நிலை உள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டங்கள்) அதிகாரிகள் கூறியதாவது:

    வழக்கு காரணமாக  பாலம் பணிகளுக்கு வழங்கப்பட்ட இரு ஒப்பந்ததாரரின் ஒப்பந்த காலம் நிறைவு பெற்று விட்டது. வழக்கு முடித்து வைக்கப்பட்டு பணி தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

    தற்போதைய நிலையில் பாலத்தை பார்வையிட்டு மீதமுள்ள பணிகளுக்கு எவ்வளவு தொகை தேவை என்பது குறித்து கருத்துரு தயாரித்து நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு அடுத்த மாதம் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×