search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்த போலீசார்

    கோஷ்டி மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை திருக்குறள் எழுத வைத்து போலீஸ் நூதன தண்டனை வழங்கினர்
    குனியமுத்தூர்:

    கோவை அருகே உள்ளது மதுக்கரை. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யப் பன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல்  அய்யப்பன் கோவில் திருவிழா தொடங்கியது.

    திருவிழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யானை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் மதுக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    யானை ஊர்வலம் வந்து கொண்டிருந்த போது, திடீரென அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது. ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டி ருந்தனர். 

    இதை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.  அப்போது 10 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆவர்.

    உடனடியாக அவர்களை போலீசார் மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர் கள் மீது வழக்குப்பதியாமல் இருக்க எந்த விதமான தண்டனை கொடுக்கலாம் என போலீசார் யோசித்தனர். 

    பின்னர் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களை திருக்குறளை எழுதி காண்பிக்க வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி வாலிபர்கள் அனைவரையும் 50 திருக்குறள் எழுதி காண்பிக்குமாறு கூறினர். அதன்படி மாணவர்களும் எழுத தொடங்கினர். ஆனால் மாணவர்கள் வெறும் 10 முதல் 12 திருக்குறளை மட்டு மே எழுதி இருந்தனர். 

    இதையடுத்து மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, படிக்கும் வயதில் இதுபோன்று தகராறில் ஈடுபடக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×