search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    கூலி உயர்வு கோரி குடும்பத்துடன் போராட்டம் - விசைத்தறியாளர்கள் முடிவு

    விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் பல்லடத்தில் நடந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதன் மூலம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பெற்று வருகின்றனர். 

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, கூலி உயர்வு அமல்படுத்தாதது, தொழில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு வருகிறது. தொழிலாளர்களும் மாற்று வேலைக்கு செல்கின்றனர். 

    இந்தநிலையில் கடந்த 2014-ல் போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த அமைச்சர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தாமல் உள்ளது. 

    இந்தநிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் பல்லடத்தில் நடந் தது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார் .

    செயலாளர் அப்புகுட்டி ( எ) பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் பரமசிவம், துணைச் செயலாளர் பாலாஜி, வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன், வேலம்பாளையம் பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் நாச்சிமுத்து வரவேற்றார். 

    இதில் கடந்த 2014 முதல் நிலுவையில் உள்ள கூலி உயர்வை பெறுவது தொடர் பாக உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற உறுப்பினர்கள், நவீன தொழில்நுட்பம் காரணமாக விசைத்தறிகளுக்கு வரும் ஆர்டர்கள் ஏற்கனவே குறைந்து வருகின்றன. இருந்தும் இதற்கென தனித்துவம் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. 

    அமைச்சர்கள், கலெக்டர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னும் கூலி உயர்வு வழங்காததை எப்படி ஏற்றுக்கொள்வது? மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது. அதுபோல் அனைவரும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால்தான் கூலி உயர்வு கிடைக்கும் என உறுப்பினர்கள் பலர் ஆவேசத்துடன் பேசினர்.

    இதையடுத்து சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில்:

    கூலி உயர்வை அமல்படுத்த கோரி, அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் கடந்த நவம்பர் 21-ந்தேதி அன்று நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்றும் இதர ரகங்களுக்கு 20 சதவீத கூலி உயர்வும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

    டிசம்பர் 1-ந்தேதி முதல் கூலி உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் எல்லோரும் வழங்கட்டும். நாங்களும் வழங்குகிறோம் என ஜவுளி உற்பத்தியாளர்கள் மாற்று கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆட்சியாளர்கள் அறிவுறுத்தியும் அதை செயல்படுத்தாமல் அவமதித்து வருகின்றனர்.

    எனவே இனியும் தாமதித்தால் தொழில் முற்றிலும் இல்லாமல் போய்விடும். மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக நினைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பெண்களை முன்னிறுத்தி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட விரைவில் தயாராவோம். 

    இதுகுறித்து கூட்டமைப்பில் உள்ள அனைத்து விசைத்தறி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து பொங்கல் பண்டிகைக்கு முன் மாபெரும் போராட்டம் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×