search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்குந்தபுரத்தில் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    செங்குந்தபுரத்தில் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்

    ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரி அறிவுறுத்தினார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொலை மற்றும் கொள்ளை, திருட்டை தடுக்கும் வகையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் செங்குந்தபுரம் கிராமத்தில் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் பேசுகையில், பொதுமக்களிடம் குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் திருமணம், திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவை குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும் குடியிருப்புவாசிகள் வெளியூருக்குச் செல்லும்போது போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் சென்று வருகின்றனர். அனேக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாமலும், விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு கதவுகளை பூட்டாமலும், ஊருக்கு செல்லும் அவசரத்தில் சிலர் ஜன்னல் கதவுகளை மூடாமலும் மறந்து சென்று விடுகின்றனர். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணத்தை வங்கியில் வைக்காமல் வீட்டில் வைப்பது பாதுகாப்பற்றது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

    இதுபோன்ற காரணங்களை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக்கி, ஆட்கள் இல்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபடுகின்றனர். ஜெயங்கொண்டம் பகுதியில் திருட்டை தடுக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் தெருக்களிலும், அதேபோல் வியாபாரிகள், வணிக நிறுவனத்தினர் தாங்கள் கடை மற்றும் வீடு, அலுவலகங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். திருட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் போலீசாரின் அறிவுரைகளை மதித்து கடைபிடிக்க வேண்டும், என்றார்.

    இதேபோல் செங்குந்தபுரம் கிராமம் உள்ளிட்ட 21 வார்டுகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் என பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதியழகன் வரவேற்றார். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.
    Next Story
    ×