என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒமைக்ரான் வைரஸ்
    X
    ஒமைக்ரான் வைரஸ்

    ஒமைக்ரான் தொற்று பாதிப்பா?- சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு

    புதுவையில் ஒமைக்ரான் தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மழை பெய்த போது சம்பந்தப்பட்ட அதிகாரி பெயரில் போலி உத்தரவுகளை தயாரித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் தகவல் பரவியது.

    இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இந்த செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யாரையும் போலீசார் கைது செய்யவும் இல்லை.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் தவறான தகவல் பரப்பப்பட்டது. அதாவது புதுவையில் 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாகவும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வருவதுபோல் தகவல்கள் பரவின.

    இந்த காட்சிகள் வைரலானது. இதனால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதன் உண்மை தன்மையை அறிய பலரும் சுகாதாரத்துறை, கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அப்போது தான் அது வதந்தி என்பது தெரிய வந்தது.

    இதுபோன்ற அதிகாரபூர்வமற்ற தகவல்களால் பெற்றோர் மத்தியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கல்வி மற்றும் காவல்துறையை கைவசம் வைத்துள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    Next Story
    ×