search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் ஆணாக மாறி கல்லூரி மாணவியை திருமணம் செய்த பெண் - பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

    பெண் ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் பூலவாடி சுகுமார்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கோமதி (வயது 21), செல்வி (21). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால்  சிறுவயதில் இருந்தே நட்பாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்துள்ளனர்.

    கோமதி 12-ம்வகுப்பு வரை படித்து விட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். செல்வி கல்லூரியில் படித்து வந்தார். நெருங்கிய தோழிகள் என்பதால் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். 

    இந்தநிலையில் கோமதிக்கு 18 வயது  பூர்த்தியானதும் அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆணாக மாறும் உணர்வு ஏற்பட்டுள்ளதால் இதுபற்றி அவர் செல்வியிடம் கூறியுள்ளார். அவர் ஒன்றும் கவலைப்படாதே என்று தெரிவித்துள்ளார். 

    ஆனால் சில நாட்களுக்கு முன்பு கோமதியின் நடை உடை பாவனைகள் ஆண் போலவே மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வி, கோமதியை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

    அங்கு ஆலோசனை பெற்ற பின் டாக்டர் அறிவுறுத்தலின் பேரில் மாற்றம் ஏற்பட்ட கோமதிக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோமதி திருநம்பியாக மாறினார். இதையடுத்து அவர் தனது பெயரை ஜெகன் என மாற்றிக் கொண்டார்.

    மேலும் செல்வியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். கோமதி ஆணாக மாறியது குறித்தும், திருமணம் செய்தது குறித்தும் இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்க முடியாமல் தயக்கம் காட்டி வந்தனர்.  

    இதனிடையே இது பற்றி அறிந்த செல்வியின் பெற்றோர் அவரை ஜெகனிடம் இருந்து மீட்க முயற்சி செய்தனர். பெற்றோர் தேடுவதை அறிந்த இருவரும் திருப்பூர் வந்து தெற்கு போலீஸ்  நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.  

    இதையடுத்து இருவரது பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்வியின் பெற்றோர் அவரை தங்களுடன் வந்துவிடும்படி அழைத்தனர். ஆனால் அவர் ஜெகனுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக தெரிவித்தார். 

    மேலும் 2 பேரும், எங்களை வாழவிடுங்கள். யாருக்கும் நாங்கள் எந்த தொந்தரவும் செய்யமாட்டோம். இங்கிருந்தால்தான் எங்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கும். எனவே வெளியூர் சென்று பிழைத்து கொள்கிறோம் என்று தெரிவித்தனர். 

    இதற்கு இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜெகனும், செல்வியும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பெண் ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×