என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.
    X
    பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

    பாலியல் தொந்தரவு இருந்தால் அதற்கான குழுவில் புகார் செய்யலாம்- பெண்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்

    அரசு, தனியார் அலுவலகங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிபுரியும்பெண்கள் பாலியல் தொந்தரவு இருந்தால் அதற்கான குழுவில் புகார் செய்யலாம் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல் துறை சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் தீர்வு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க, அனைத்து துறை அலுவலர்களும் திரும்ப படித்து ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    பணிபுரியும் இடத்தில் ஆண்கள், பெண்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது அதாவது இரட்டை அர்த்தத்தில் பேசுவது, உடலை தொடுதல், ஆபாசம் கலந்த பேச்சு, இரட்டை அர்த்தத்தில் சைகை காட்டுவது, ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது உள்ளிட்டவை பாலியல் ரீதியான துன்புறுத்தலை காட்டுவது ஆகும்.

    பாலியல் தொல்லைகளுக்கு அடிப்படை காரணமே ஆண்கள் சமுதாயத்தில் மேம்பட்டவர்களாகவும் அனைத்து முடிவுகளும் அவர்களே எடுப்பவர்களாகவும் திகழ்கிறார்கள். பொதுவாக சமுதாயத்தில் ஆண்களின் கட்டுப்பாட்டிலும் அவர்களுக்கு அடங்கி வாழவும் எல்லாவற்றிற்கும் பெண்கள் ஆண்களை நம்பியே வாழ்வதும் இயல்பாகிறது. இதன் தாக்கம் பணிபுரியும் இடத்தில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும் நிகழ்கிறது. சமுதாயத்தில் ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் பணிபுரியுமிடத்தில் மேலதிகாரியாகவும், சகஜமாக பழகும் பணியாளர்களாகவும் ஆண்களுக்கு சமமாக திகழ்வதும் ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலையிலேயே பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகிறது.

    அரசு, தனியார் அலுவலகங்களில் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள் அந்தந்த பணியிடங்களில் பாலியல் பிரச்சினைகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில் புகார் செய்யலாம். அப்படி செய்யப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×