என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே அடகு கடை உரிமையாளர் மர்ம மரணம்
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த கனகம்மா சத்திரத்தைச் சேர்ந்தவர் அஜித் (வயது34). இவர் அதே பகுதியில் அடகு கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று மாலை அஜித் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் இரவு கடம்பத்தூரில் இருந்து மீண்டும் கனகம்மாசத்திரம் நோக்கி புறப்பட்டார். ஆனால் அஜித் வீடு வந்து சேரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இதற்கிடையே திருவள்ளூர் அடுத்த பிரியங்குப்பம் அருகே அஜித் தலையில் பலத்த காயத்துடன் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






