search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டு வருகிறது. எனினும் சில்லரை கடைகளில் தக்காளி விலையை வியாபாரிகள் குறைக்கவில்லை.
    போரூர்:

    கனமழையால் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது.

    இதன் காரணமாக அதன் விலை அதிகரித்து சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்கப்பட்டது.

    கடந்த வாரம் மழை குறைந்ததால் தக்காளி வரத்து அதிகரித்து விலை குறையத்தொடங்கியது. ரூ.160 வரை விற்கப்பட்ட தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது.

    இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே தக்காளி வரத்து மீண்டும் குறைந்ததால் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக 1 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்திருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை குறைய தொடங்கி உள்ளது.

    நேற்று 39 லாரிகளில் தக்காளி வந்த நிலையில் இன்று 46 லாரிகளில் விற்பனைக்கு குவிந்தது.

    இதனால் தக்காளி விலை மொத்த விற்பனை கடைகளில் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டு வருகிறது. எனினும் சில்லரை கடைகளில் தக்காளி விலையை வியாபாரிகள் குறைக்கவில்லை. தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

    இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தான் கோயம்பேடு சந்தைக்கு தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. இந்த பகுதிகளில் தற்போது மழை முழுவதுமாக நின்றுவிட்டது. எனினும் கனமழையால் தமிழகத்தில் பல இடங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாகவே தக்காளி தேவை அதிகரித்து கோயம்பேடு சந்தைக்கு வரும் வரத்து குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரித்து விலை குறைய தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×