search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை 13-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

    நாளை மாநகரம் முழுவதும் 138 மையங்களிலும், மாவட்டத்தில், 645 மையங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை (4-ந்தேதி) 13 ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரை 13.76 லட்சம் ஆண்கள், 12.72 லட்சம் பெண்கள் என 26 லட்சத்து 49 ஆயிரத்து 674 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    மாவட்டத்தில் நடத்தப்பட்ட 12 மெகா தடுப்பூசி முகாம் மூலம், 17.55 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 8.94 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (4-ந்தேதி) மாநகரம் முழுவதும் 138 மையங்களிலும், மாவட்டத்தில், 645 மையங்களிலும் காலை 7மணிமுதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

    18 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால் நம்மை சுற்றி இருப்பவருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை செலுத்தியவர் இரண்டாம் தவணையும் செலுத்திட வேண்டும் என்றனர். இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தாத பணியாளர் இருப்பின் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ. 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுமென திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    தமிழக அரசின் பொதுசு காதார விதிகளின்படி கொரோனா தொற்றுள்ள நபரிடம் இருந்து நோய் பரவலை தவிர்க்கும் பொருட்டு புதிய விதிகளை அரசு அமல்படுத்தியுள்ளது.

    பொது இடம் மற்றும் வீதிகள், மார்க்கெட், சினிமா தியேட்டர், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள், ஓய்வறைகள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் பணியாற்றுவோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

    தடுப்பூசி செலுத்தாத தொழிலாளர்களை தவிர்க்க வேண்டுமென, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது சுகாதாரத்துறை இயக்குனரின் உத்தரவுப்படி தனிநபர் அனைவரும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தரப்பு பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், டாக்டர்கள், மேற்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    வணிக நிறுவனங்களில் இக்குழுவினர் தொடர் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது தொழிற்சாலை, கடைகள் உள்ளிட்ட இடங்களில் பணியாளர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். 

    அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் பணியாளர், ஊழியர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×