search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தூய்மைப்பணியாளர்களின் பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்-தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் அறிவுறுத்தல்

    அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தைவிட குறைவான ஊதியம் வழங்குவதாகப் தூய்மை பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தார். 

    இதில் திருப்பூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். 

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர்மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தைவிட குறைவான ஊதியம் வழங்குவதாகப் புகார் தெரிவித்துள்ளனர். 

    இந்த ஊதியத்தை வங்கியில் செலுத்தாமல் கையில் வழங்குவதால் பிடித்தம் செய்த தொகை குறித்த விவரங்களை ஒப்பந்ததாரர்கள் தெரிவிப்பதில்லை என்ற புகாரும் வரத்தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்.

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தமிழக அரசு ஒப்பந்த முறையை ஒழித்து நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

    காங்கயத்தில் முன்பு பணியாற்றிய நகராட்சி ஆணையர் மீதான பாலியல் புகார்குறித்து விசாகா கமிட்டியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில்  அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய், மாநகர  காவல் துணை ஆணையர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்மாநகராட்சியில் 1, 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களும், மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 

    இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக அவர்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனிடையே ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத்தின் தலைவர் எத்தனை பணியாளர்கள் இங்கு வந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அரங்கில் இருந்த தூய்மைப் பணியாளர்களை கையைத் தூக்கச் சொல்லியபோது 50 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஏன் முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

    அதேபோல, தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ.அட்டை வழங்கப்பட்டுள்ளதா, மாத ஊதியம் வங்கியில் செலுத்தப்படுகிதா?, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா?என்று கேள்வி எழுப்பியபோது, தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது எங்களுக்கு ஒரு குறையும் இல்லை என்றனர்.
    Next Story
    ×