search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி கொலை
    X
    விவசாயி கொலை

    ஆத்தூர் அருகே விவசாயி கொலை: கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்

    ஆத்தூர் அருகே முன்பணம் வாங்கி விட்டு நிலத்தை தர மறுத்ததால் விவசாயியை கொலை செய்தோம் என கைதான 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்த அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 74). திருமணம் ஆகாத இவர் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மாயமானார். இது குறித்து அவரது உறவினர் கனகம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நாமகிரி பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் சுப்ரமணியை 5 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ராமதாஸ் (27), நரசிங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் (28) ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது விவசாய நிலத்தை விற்பனை செய்வதாக சுப்ரமணி தங்களிடம் ரூ.10 லட்சத்தை முன்பணமாக வாங்கி விட்டு நிலத்தை விற்க மறுத்ததால் அவரை கொலை செய்து ஆற்றில் புதைத்து விட்டதாக கூறி உள்ளனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறி இருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் சிவகங்காபுரம் கிராமத்தில் சுப்பிரமணிக்கு சொந்தமாக ரூ.2 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை சுப்ரமணி விற்க முயன்றதால் நாங்கள் உள்பட 5 பேரும் அதனை வாங்க ரூ. 1.5 கோடிக்கு விலை பேசினோம், அதற்காக முன்பணமாக ரூ. 10 லட்சத்தை கொடுத்தோம். அதன்பிறகு நிலத்தை விற்க சுப்ரமணி மறுத்து விட்டார். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுப்ரமணியை கொலை செய்ய திட்டமிட்டோம், அதன்படி கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரம் கிராமத்திற்கு சுப்ரமணியை வரவழைத்து அருகில் உள்ள வஷிஷ்ட நதிக்கு அழைத்து சென்றோம், அங்கு 5 பேரும் சேர்ந்து சுப்ரமணியை அடித்து கொன்று ஆற்றிலேயே குழி தோண்டி புதைத்தோம். இது தொடர்பாக செல்போனில் பேசியதை வைத்து போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    சுப்ரமணியின் உடலை புதைத்ததாக கூறப்படும் இடத்தை அவர்கள் மாற்றி, மாற்றி கூறி வருகிறார்கள். இதனால் அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கு அனைத்தும் விரைவில் ஆத்தூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், அப்போது இந்த வழக்கின் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×