search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தமான் பகுதியில் மேக கூட்டம்
    X
    அந்தமான் பகுதியில் மேக கூட்டம்

    அந்தமான் பகுதியில் மேக கூட்டம்: மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமா? வானிலை அதிகாரி விளக்கம்

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதியில் நீடித்து வருவதால் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    கடந்த 25 நாட்களில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பொழிவை கொடுத்துள்ளது.

    கடந்த 5-ந்தேதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் கனமழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியதால் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின.

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் அதனை அகற்றும் பணி ஒரு வாரம் முழுவீச்சில் நடைபெற்றது.

    அதையடுத்து கடந்த 15-ந்தேதி உருவான மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    கன மழையை எதிர் கொள்ள அனைத்து முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுபெற்று கரையை கடந்ததால் சேதம் ஏற்படவில்லை. மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    ஆனாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதியில் நீடித்து வருவதால் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் மேக கூட்டங்கள் திரண்டு இருப்பதால் அடுத்த ஒருசில நாட்களில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சூழல் ஏற்படுமா? என்று வானிலை நிபுணர்கள் கணித்து வருகிறார்கள்.

    வானிலை மையம்

    அதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகுமா? என்று ஆராய்ந்து வருகின்றனர். அந்தமான் பகுதியில் மேக கூட்டங்கள் அதிகமாக இருப்பதால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர், “தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இல்லை. ஆனாலும் வங்க கடலில் மேக கூட்டங்கள் திரண்டு வருவதை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

    இதற்கிடையில் இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எந்த இடத்திலும் தண்ணீர் சூழவில்லை.

    மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தொடர் மழையை கண்காணித்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையும் படியுங்கள்...சப்-இன்ஸ்பெக்டர் கொலை: குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் - வைகோ

    Next Story
    ×