search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    அம்மா மருந்தகங்களை மூடுவதை கைவிட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை தி.மு.க. அரசு முழுமையாகவே நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகள் கிடைத்திட வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை தொடங்க உத்தரவிட்டார்.

    “ஆடத்தெரியாத ஒருவர் கூடம் கோணல்” என்று சொல்வது போல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தெரியாத இந்த அரசு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி, அம்மாவின் அரசால் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா கண்டு வருகிறது.

    அம்மா சிமெண்ட் விற்பனைக்கு மூடு விழா செய்துவிட்டு, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன், வலிமை சிமெண்ட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த தி.மு.க. அரசு.

    அம்மா குடிநீர்

    பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த சுத்தமான அம்மா குடிநீரின் உற்பத்தியை முழுமையாகவே நிறுத்திவிட்டது இந்த தி.மு.க. அரசு.

    அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா நடமாடும் மருத்துவமனைகளுக்கு மூடு விழா செய்துவிட்டு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அம்மாவின் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு இல்லம் தேடி மருத்துவம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த அரசு.

    ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், பருப்பு, காய்கறி, சிமெண்ட் போன்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது அம்மாவின் அரசு, மாநில விலை நிலைப்படுத்தும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்று வந்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

    ஆனால் இந்த தி.மு.க. அரசு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமல்லாமல், அம்மாவின் அரசு ஏற்கனவே மக்களுக்கு நிறைவேற்றிய பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா செய்த நிலையில் இப்போது நிதிச் சுமையை காரணம் காட்டி அம்மா மருந்தகங்களையும் மூட முடிவு செய்துவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் என்ன செய்கின்றன? அரசுக்கு என்னென்ன ஆலோசனைகள் வழங்கின? என்று தெரியவில்லை.

    மக்கள் நல அரசு என்றால் மக்களின் நலனைக் காக்கும் அரசு. ஆனால் இந்த அரசோ மக்களின் நலத்திட்டங்களைப் பறிக்கும் அரசாக உள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்தி, வருவாயைப் பெருக்க வழி தெரியாமல் தவிக்கும் இந்த கையாலாகாத அரசு, அம்மா அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    மக்களின் உயிர் காக்கும் தரமான மருந்துகளை சலுகை விலையில் விற்கும் அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தகங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும், மக்கள் நலனுக்கு எதிரான இந்த முடிவை அரசு உடனே கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    Next Story
    ×