என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
    X
    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

    கொரோனாவால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2¼ கோடி நிதி உதவி- அமைச்சர் வழங்கினார்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 233 முகாம்கள் அமைக்கப்பட்டு 9 ஆயிரத்து 978 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 76 குழந்தைகளுக்கு ரூ.2 கோடியே 28 லட்சம் நிவாரண தொகை மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள 46 பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு ரூ.4.6 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அமைச்சர் தா.மோ.அன்பசரன் கலந்து கொண்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கும் நிவாரண உதவி, வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் 296 குழந்தைகளுக்கு ரூ.14 கோடியே 80 லட்சம் நிவாரண உதவியும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 9,803 குழந்தைகளுக்கு ரூ.294 கோடியே 9 லட்சம் நிவாரண உதவியும், ஆக மொத்தம் 10 ஆயிரத்து 99 குழந்தைகளுக்கு ரூ.308 கோடியே 89 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வீதம் 102 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 6 லட்சம் நிவாரண உதவியும், ஆக மொத்தம் 104 குழந்தைகளுக்கு ரூ.3 கோடியே 16 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    நிதி உதவிகள் பெற்ற குழந்தைகள் உயர் கல்வி கற்கும் வரை மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடவேண்டிய 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள் தொகை 18லட்சத்து 29 ஆயிரத்து 200 ஆகும். அவர்களில் இதுவரை முதல் தவணையாக 13லட்சத்து 14 ஆயிரத்து 930 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இது 72 சதவீதம் ஆகும். 2-வது தவணையாக 6,62,116 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது 36 சதவீதம் ஆகும்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கால மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் தினமும் 96 நடமாடும் மருத்துவ முகாம்களும் அரசு மருத்துவமனைகளில் 46 இடங்களில் தற்காலிக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

    மாவட்டத்தில் இதுவரை 233 முகாம்கள் அமைக்கப்பட்டு 9 ஆயிரத்து 978 பேர் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட ஊராட்சித் தலைவர் செம்பருத்தி, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இதயவர்மன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன், செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் எஸ்.நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×