search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பரம்பாக்கம் ஏரி
    X
    செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 2,151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக குறைந்து உள்ளது.
    பூந்தமல்லி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 20.37 அடிக்கு தற்போது தண்ணீர் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியதால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது.

    இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதலில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து அதிகரித்ததால் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. இதனால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. எனினும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்படவில்லை.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தொடர்ந்து 2,151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாக குறைந்து உள்ளது.

    ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. இதில் 2,695 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×