search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரிமுனை அம்மா உணவகத்தில் இன்று காலை உணவு சாப்பிடும் பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    பாரிமுனை அம்மா உணவகத்தில் இன்று காலை உணவு சாப்பிடும் பொதுமக்களை படத்தில் காணலாம்.

    அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு சாப்பிட்டு பசியாறிய குடிசைவாழ் மக்கள்

    சென்னையில் 200 வார்டுகளில் 396 அம்மா உணவகங்களிலும், அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும் இன்று காலையில் இருந்து உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்புகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது அம்மா உணவகத்துக்கு சென்றார். அங்குள்ள உணவை சாப்பிட்டார். உணவு தரமாக இருப்பதாக அவர் ஊழியர்களிடம் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து அனைத்து அம்மா உணவகங்களிலும் மழை முற்றிலும் நிற்கும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து இன்று முதல் சென்னையில் உள்ள 403
    அம்மா உணவகங்களில்
    3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், இரவு சப்பாத்தி போன்றவை அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக அந்தந்த பகுதியில் உள்ள ஏழைகள், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையின்றி இலவசமாக வினியோகிக்கப்பட்டது.

    அம்மா உணவகம்


    சென்னையில் 200 வார்டுகளில் 396 அம்மா உணவகங்களிலும், அரசு மருத்துவமனைகளில் 7 இடங்களிலும் இன்று காலையில் இருந்து உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

    குறைந்த விலையில் விற்கப்பட்ட உணவுகள் இன்று முதல் கட்டணமின்றி 3 வேளையும் வழங்கப்படுவதால் கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் போன்றவர்கள் அம்மா உணவகங்களில் இன்று ஆர்வத்துடன் சாப்பிடுவதை காண முடிந்தது.

    கொரோனா பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்தது. கூட்டம் இல்லாததால் வருவாய் இழப்பு அதிகரித்து அதிக நஷ்டத்தை சந்தித்து வந்தது.

    இந்த நிலையில் பருவமழை பாதிப்பின் காரணமாக அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படுவதை அறிந்த அந்தந்த பகுதி மக்கள் காலையிலேயே அங்கு குவியத் தொடங்கினர்.

    வயதானவர்கள், கூலித்தொழிலாளர்கள் அம்மா உணவகங்களில் ஆர்வத்தோடு உணவு அருந்தினார்கள். மழை பாதிப்பால் தொழில் இல்லாமல் வருவாய் இழந்தவர்களும் அம்மா உணவகங்களை நாடினார்கள்.

    கொரோனா காலத்தில் கடந்த ஆண்டு அம்மா உணவகங்களில்
    3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேபோல தற்போதும் அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் சாப்பிடுவதற்காக காத்திருந்தனர்.

    உணவிற்காக பணம் செலவழிக்க வேண்டிய நிலை இல்லாததால் ஏராளமான மக்கள் அம்மா உணவகங்களில் கூடினார்கள். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அம்மா உணவகங்களில் தேவையான அளவு உணவு தயாரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    வழக்கமான அளவு தற்போது உணவு தயாரிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அதிகரித்தால் அதற்கேற்றவாறு கூடுதலாக சமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

    3 வேளையும் அம்மா உணவகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக உணவு கிடைப்பதால் மக்கள் வயிறாற சாப்பிட்டு செல்கிறார்கள். ஏழை-எளிய மக்களின் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள் இந்த மழைக் காலத்திலும் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


    இதையும் படியுங்கள்... பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்
    Next Story
    ×