search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X
    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    சென்னையில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரம் பெய்ய தொடங்கும்.

    இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்ய தொடங்கியது.

    வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 449.7 மி.மீ. பெய்வது இயல்பான மழை அளவாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இயல்பைவிட 6 சதவீதம் அதிகம் மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

    அதை உறுதிப்படுத்துவது போல கடந்த 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி நாளிலும் மழை நீடித்தது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவுக்கு அதிகரித்து இருந்தது. சென்னை புறநகரில் உள்ள குடிநீர் ஏரிகளும் 85 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி இருந்தன. இந்தநிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வந்தது.

    நேற்று இரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தது. விடிய விடிய இந்த மழை நீடித்தது. இன்று காலையிலும் 10 மணி வரை மழை பெய்து கொண்டே வந்தது. இந்த மழை 3 மணி நேரத்திற்கு சென்னையில் நீடிக்கும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

     

    வீடுகளுக்குள் தண்ணீர்

    10 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேளச்சேரி உள்பட சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

    சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் சென்னையில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வாகன ஓட்டிகள் கடுமையாக திணற நேரிட்டது.

    வேளச்சேரி, வடபழனி, கோடம்பாக்கம், முகப்பேர், நொளம்பூர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி உள்பட பல பகுதிகளில் மழை நீடித்துக் கொண்டே இருந்தததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஈக்காட்டுதாங்கலில் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிறைந்து இருந்தது. இதனால் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதப்பது போல காட்சி அளித்தது.

    சென்னையில் பல இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் புகுந்த தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற முடியாதபடி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    விருகம்பாக்கம் மார்க்கெட், அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், வளசரவாக்கம், கோயம்பேடு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை தண்ணீரால் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    வடசென்னையிலும் சாலைகளில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலைகள் மிக கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளன. இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் கடும் சவாலாக மாறி உள்ளது.

     

    மழை காரணமாக சில தெருக்களில் மரங்களும் வேறோடு சாய்ந்து

    வியாசர்பாடி, மாதவரம், மடிப்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. புறநகர் பகுதிகளில் அய்யப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பாடி போன்ற இடங்களில் வெள்ளப் பாதிப்பு காணப்படுகிறது.

    அம்பத்தூர் அம்மா உணவகத்தில் தண்ணீர் புகுந்தது. அது மூடப்பட்டு உள்ளது. தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அங்கு அம்மா உணவகம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே முக்கிய சாலைகளில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. அவற்றை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்தநிலையில் விடிய விடிய பெய்த மழை அந்த பணிகளை முடக்கி உள்ளது.

    அதோடு மட்டுமின்றி மேலும் பல சாலைகளில் பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல இடங்களில் மழைநீர் கால்வாய் மூடிகள் திறந்து கிடக்கின்றன. எனவே சாலையோரங்களில் நடந்து செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கடுமையான மழை காரணமாக சில தெருக்களில் மரங்களும் வேறோடு சாய்ந்து விழுந்தன. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி மழை அவர்களை முடக்கி போட்டது.

    சிறிய சந்தைகள், தெருவோர வியாபாரிகள் தொடர் மழை காரணமாக கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. அவர்கள் வாழ்வாதாரத்தில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்திலும், அம்பத்தூரிலும் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

    எம்.ஜி.ஆர். நகரில் 17 செ.மீட்டரும், அண்ணாபல்கலைக் கழகத்தில் 16 செ.மீட்டரும், புழலில் 15 செ.மீட்டரும், தரமணியில் 13 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகள் 10 செ.மீ.க்கும் மேல் மழை பொழிவை பெற்றன. இதனால் சென்னை நகர் முழுமையாக மழை வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுதான் ஒரே நாளில் 20 செ.மீ. மழைக்கு மேல் பெய்துஇருந்தது. அதன்பிறகு இன்று 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. சென்னையில் தொடர்ந்து அடுத்த வாரம் இறுதிவரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து ஏற்கனவே மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

    அந்த மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிக்கு சென்று மழை தண்ணீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை முக்கிய சாலை பகுதிகளில் ராட்சத எந்திரம் மூலம் மழை தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடங்கின. என்றாலும் தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் அடுத்த சில நாட்களுக்கு மக்களுக்கு திணறலை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. தொடர் மழை காரணமாக சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்க முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    சென்னையில் விடிய விடிய பெய்த மழைக்கு சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தி.நகர் துரைசாமி பாலத்தில் மழை தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால் மேற்கு மாம்பலத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோன்று தென் சென்னை பகுதிகளில் பல இடங்களில் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலை பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.

    இதையும் படியுங்கள்... முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதி

    Next Story
    ×