search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூவம் ஆறு
    X
    கூவம் ஆறு

    நண்பர்களுடன் சீட்டு விளையாடியபோது போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி பலி

    நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடியபோது போலீஸ் வந்ததால் பயந்துபோய் கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி, நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்துக்கு பிறகு அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    ஆவடி:

    ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் கூவம் ஆற்றின் ஓரமாக உள்ள சுடுகாட்டில் அமர்ந்து சீட்டு விளையாடினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். போலீஸ் வருவதை கண்டதும், அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த அனைவரும் நாலாபுறமும் சிதறி தலைதெறிக்க ஓடினார்கள்.

    அப்போது சரவணன், போலீசுக்கு பயந்து அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால் கூவம் ஆற்றில் செடி, கொடிகள், ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து இருந்ததால் செடிகொடிகளுக்கு இடையே சரவணன் சிக்கிக்கொண்டார்.

    இதை கண்ட அவரது நண்பர்கள், கூவம் ஆற்றில் இறங்கி சரவணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் பயந்துபோய் ஆற்றில் இருந்து வெளியேறி விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், இருள் சூழ்ந்து விட்டதால் மின் விளக்குகள் உதவியுடன் சுமார் 5 மணி நேரம் போராடி இரவு 9 மணியளவில் கூவம் ஆற்றில் செடி கொடிகளுக்கு இடையே சிக்கி இருந்த சரவணனை பிணமாக மீட்டனர். அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டது தெரிந்தது.

    பட்டாபிராம் போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பலியான சரவணனுக்கு சத்தியவாணி (38) என்ற மனைவியும், ஷாலினி (21), மாலினி (19) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    போலீசுக்கு பயந்து கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி, நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×