search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
    X
    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

    கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 2,602 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய கவர்னர்

    பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    கோவை:

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் முன்னிலை வகித்தார்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பி.எச்.டி. மாணவர்கள் 108 பேர், முதுநிலை முடித்த மாணவர்கள் 260 பேர், இளநிலை மாணவர்கள் 2,202 பேர் உள்பட மொத்தம் 2,602 மாணவ, மாணவிகளுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது.

    இதில் மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் திருலோச்சன் மொகபத்ரா, பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    முன்னதாக பட்டம் வாங்க கூடிய மாணவ, மாணவிகள் அனைவரும் காலையிலேயே பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். 9 மணிக்கு மாணவர்கள், விழா அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

    விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பதவியேற்றுக் கொண்டார்.

    இந்த விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.

    பட்டமளிப்பு விழா முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். கவர்னரின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 
    Next Story
    ×