search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன்
    X
    கவர்னர் தமிழிசை சவுந்தரரராஜன்

    புதுவையில் மூடிக்கிடக்கும் ரே‌ஷன் கடைகளை திறக்க கவர்னர் தமிழிசை அனுமதி

    புதுவை கவர்னர் தமிழிசை மீண்டும் ரே‌ஷன் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். ரே‌ஷன் கடைகள் மூலமாக தீபாவளி பண்டிகைக்காக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்க அனுமதியளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் குடிமை பொருள் வழங்கல்துறை சார்பில் ரே‌ஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி, மழைக்கால நிவாரணம், பண்டிகைக்கால பரிசு பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.

    புதுவை மாநிலத்தில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் 317, பாப்ஸ்கோ வில் 35, தனியார் வசம் 25 என மொத்தம் 377 ரே‌ஷன் கடைள் இயங்கி வந்தது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரிசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரொக்கம் செலுத்தப்பட்டது.

    இதனால் மாநிலம் இயங்கி வந்த ரே‌ஷன்கடைகள் மூடப்பட்டது. அதோடு ரே‌ஷன் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சுமார் 40 மாதத்துக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    இருப்பினும் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கியது. இதை விநியோகம் செய்ய ரே‌ஷன்கடை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

    ரே‌ஷன் கடைகளை திறக்காமலேயே பூட்டிக்கிடந்த அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கண்காணிப்புடன் அரிசி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை வழங்க ரே‌ஷன்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    ரே‌ஷன்கடை ஊழியர்களும் கடைகளை திறக்கவும், சம்பளம் வழங்கவும் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு புதிய அரசு ரே‌ஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்கப்போவதாக அறிவித்தது. இதற்கான பூர்வாங்க பணியில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார் ஈடுபட்டார்.

    டெல்லியில் மத்திய மந்திரியை சந்தித்து ரே‌ஷன் கடைகளை திறக்க அனுமதி கோரினார். மத்திய அரசும் அனுமதி தருவதாக உறுதியளித்திருந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ரே‌ஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை அனைத்து ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் ரே‌ஷன்கடைகள் திறக்காத நிலையில் இந்த பொருட்கள் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி நிலவியது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியை ரே‌ஷன் கடை ஊழியர்கள் நேரில் சந்தித்து, தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடைகளை திறந்து பொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை மீண்டும் ரே‌ஷன் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். ரே‌ஷன் கடைகள் மூலமாக தீபாவளி பண்டிகைக்காக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்க அனுமதியளித்துள்ளார். இதனால் பல ஆண்டுக்கு பின் மீண்டும் புதுவையில் ரே‌ஷன்கடைகள் திறக்கப்பட உள்ளது.

    அதோடு மேலும் சில கோப்புக்கும் கவர்னர் தமிழிசை அனுமதி வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுவையில் உள்ள அனைத்து குடும்பத்துக்கும் ரே‌ஷன்கடைகள் மூலமாக 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் முதல்-அமைச்சரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் வருகிற 8-ந்தேதி முதல், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான கல்வித்துறையின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் காரைக்கால் பகுதியில் அட்டவணை மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு 4-ம் கட்டமாக 83 வீடுகள் கட்ட மத்திய அரசின் பங்கு ரூ. 16.86 லட்சத்தை விடுவிக்கவும், புதுவையில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஜூன் 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை 3 மாதங்களுக்கு இலவச அரிசிக்கு பதிலாக ரொக்கம் வழங்க ரூ.2.75 கோடிக்கும் அனுமதி வழங்கி உள்ளார்.
    Next Story
    ×