search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை - மின்னல் தாக்கி பெண் பலி

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் விருத்தாசலத்தில் மின்னல் தாக்கியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூர்:

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும், வருகிற 7-ந்தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழை நேற்று காலை வரை விட்டு விட்டு பெய்தது. பின்னர் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், வேப்பூர், குப்பநத்தம், சேத்தியாத்தோப்பு, தொழுதூர், வானமாதேவி, புவனகிரி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி அலமேலு(வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது வயலில் மணிலா அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று மாலை 3 மணியளவில் விருத்தாசலம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆலடி போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த அலமேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் தாசில்தார் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின்போது, குமாரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராயர் (59) என்பவரின் மோட்டார் கொட்டகை தீப்பற்றி எரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 63.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பரங்கிப்பேட்டையில் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் சராசரியாக 23.58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேப்பூர்......................................63

    காட்டுமயிலூர்........................57

    மே.மாத்தூர்..............................54

    விருத்தாசலம்...........................42

    ஸ்ரீமுஷ்ணம்...........................35.2

    காட்டுமன்னார்கோவில்...28

    பெலாந்துறை........................24.2

    லால்பேட்டை.........................24

    குறிஞ்சிப்பாடி.........................23

    வடக்குத்து................................22

    கீழசெருவாய்............................21

    வானமாதேவி.........................8.6

    தொழுதூர்.................................17

    கொத்தவாச்சேரி....................14

    புவனகிரி....................................13

    லக்கூர்..........................................11

    சேத்தியாத்தோப்பு..............10.6

    கடலூர்.......................................9.4

    கலெக்டர் அலுவலகம்.......8.6

    சிதம்பரம்.....................................8

    அண்ணாமலைநகர்.............7.8

    பண்ருட்டி................................7.2

    குடிதாங்கி.................................7.2

    Next Story
    ×