search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீர்
    X
    கிருஷ்ணா தண்ணீர்

    கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தம்

    கண்டலேறு அணையில் இருந்து சென்னை வரை அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது.
    சென்னை:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன.

    இவை தவிர தேர்வாய் கண்டிகையில் புதிய ஏரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி. தண்ணீர் ஆகும்.

    பருவ மழை காலங்களில் பெய்யும் மழை தண்ணீர் இந்த 5 ஏரிகளிலும் சேமித்து வைக்கப்படுகிறது. இது தவிர தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்தும் சென்னைக்கு குடிதண்ணீர் பெறப்படுகிறது.

    இதற்காக கண்டலேறு அணையில் இருந்து சென்னை வரை கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் சென்னை மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 5 முக்கிய ஏரிகளும் நிரம்பி வருகின்றன. 5 ஏரிகளிலும் இன்று காலை நிலவரப்படி 9.65 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு இன்னும் ஓராண்டு குடிதண்ணீர் தேவையை மிக எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வரும்போது இந்த 5 ஏரிகளுக்கும் மேலும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்த சமயத்தில் 5 ஏரிகளிலும் முழு கொள்ளளவு எட்டப்பட்டு விடும். சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக அதிகரிக்கும்.

    சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் கையிருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ணா கால்வாயில், ஊத்துக்கோட்டை பகுதியில் வினாடிக்கு 407 கனஅடி தண்ணீரே பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. அடுத்து வரும் நாட்களில் இந்த தண்ணீர் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுமையாக நின்று விடும்.

    கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் சென்னை மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் 5 ஏரிகளிலும் 3.91 டி.எம்.சி. நீர்தான் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 10 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கிருஷ்ணா கால்வாயில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் தேவையில்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    பூண்டி ஏரியில் இன்று காலை நிலவரப்படி 84 சதவீதம் அளவுக்கு ஏரி நிரம்பி உள்ளது. எனவே மேற்கொண்டு தண்ணீரை அந்த ஏரியில் தேக்க வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் பெறுவது இனி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று தெரிகிறது.

    கிருஷ்ணா கால்வாயில் கடந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து இதுவரை 4.42 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூண்டி ஏரியின் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    தண்ணீர் இருப்பு அதிகரித்ததால் சென்னை மக்களுக்கு தினமும் சுமார் 980 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் விநியோகம் செய்ய முடிந்தது.

    அடுத்த கட்டமாக சோழவரம் ஏரி நீர் இருப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் முழுமையாக நின்றதும் அந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    கிருஷ்ணா கால்வாய் இரு கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கால்வாய் மேடாகி இருக்கிறது. இவற்றை ரூ.24 கோடி செலவில் சீரமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×